என்ன தெரிஞ்சுக்கப் போறோம்?

என்ன தெரிஞ்சுக்கப் போறோம்?

என்ன தெரிஞ்சுக்கப் போறோம்?

என் மகளின் பள்ளித்தோழி சான்வி இன்று இல்லை.
14 வயது பெண் குழந்தை தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
நானும் குடும்பத்தோடு சென்று இருந்தேன் அவளது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள.
நாளை candlelight vigil நடத்தி #saveourchildren என்று கதறப் போகிறோம்.

என்ன தெரிஞ்சுக்கப் போறோம்?
சின்னப்பெண். பயந்து போய் இது போதும் இனி தாங்காது என்று கிளம்பி விட்டாள்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் திரும்ப வரப்போவதில்லை.
நாம என்ன தெரிஞ்சுக்க போறோம்?

என்னென்ன அழுத்தங்களை நாம கொடுக்கிறோம்?
படிக்கணும், நல்ல மார்க் எடுக்கணும்.
AP Advanced Placement படிப்புகள் எல்லாம் படிச்சு, பெரிய காலேஜில எப்படியாச்சும் இடம் பிடிச்சுடனும்.

எப்படிப்பட்ட இடத்தை நாம் கொடுத்து இருக்கிறோம்?
பிள்ளைகள் மென்மையானவர்கள். பிள்ளைகள் பயந்துபோகக் கூடியவர்கள்.
அப்படி பயந்தால் நம்மிடம் சொல்லும் அந்த இடத்தைக் கொடுத்து இருக்கிறோமா?

பிள்ளை, பள்ளியில் ஒரு AP Exam -இல் நடந்த குளறுபடியால், பள்ளியில் இருந்து நீக்கப் படுகிறாள்.
இனி இந்தப் பள்ளியில் இடம் இல்லை என்று பள்ளி மறுக்கிறது.
மோசமான குழந்தை என்று முத்திரை குத்தப்படுகிறாள்.
ஏதாவது ஒருவகையில் குற்றம் செய்த மாணவர்கள் மட்டும் படிக்கும் (நம் ஊர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போன்ற) ஒரு பள்ளியில் தான் இனி படிக்க வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறாள். அது போன்ற நரகம் தனக்கு வேண்டாம் என கிளம்பிவிட்டாள் மீள முடியாத இடத்தை நோக்கி. தாள முடியாத துக்கத்தை அனைவருக்கும் கொடுத்துவிட்டு.

என்ன செய்யப் போகிறோம்?
இருக்கும் குழந்தைகளைக்கு என்ன சொல்லித் தருவது?

  1. ஒரு பள்ளியில் இருந்து நீக்கப் பட்டு விட்டால் உலகமே முடிந்து விடாது.
  2. ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் உலகே இருண்டு விடாது.
  3. ஒரு பாடத்தில் தோல்வியுற்றால் , ஒரு வருடப் படிப்பே வீணாகப் போனாலும் கூட, வாழ்க்கை அத்தோடு முடிவதில்லை.

இதைப் படிக்கும் நீங்கள் இன்று ஒரு மாணவ மாணவியர் என்றால் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தோழனோ தோழியோ இப்படிப்பட்ட சிக்கலில் இருந்தால் “விடுறா பார்த்துக்கலாம்” என்று சொல்லுங்கள்.
அவர்களின் பெற்றோர்களுக்கும் சொல்லுங்கள்.
இன்று ஒரு பெற்றோர் என்றால் உங்கள் குழந்தைகளுடன் ஒரு நிமிடம் உட்கார்ந்து பேசுங்கள்.
வெற்றி தோல்விகளில் பக்கத்தில் நில்லுங்கள். “சரி விடு பார்த்துக்கலாம்” என்று சொல்லுங்கள்.
குழந்தைகள் தங்கள் மனத்தில் தோன்றுவதை தயக்கமின்றி சொல்லும் இடத்தில் நீங்கள் நில்லுங்கள்.
அவ்வளவு தான். #saanvi #saveourchildren #candlelightvigil

Leave a comment